தேனி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளின் கணக்கெடுப்பு பணி இன்று நிறைவு பெறும்: கலெக்டர் தகவல்

தேனி, டிச. 22: திருநெல்வேலியில் தனியார் பள்ளி கழிப்பறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, தேனி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் குறித்த கணக்கெடுப்பில் 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 31 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சில கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை தேனி கல்வி மாவட்டத்தில் 19 பள்ளிகள், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 19 பள்ளிகள், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 26 பள்ளிகள் என மொத்தம் 64 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், சில வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவல் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது, ‘தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்க 58 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பெரியகுளம், உத்தமபாளையம் கோட்டாட்சியர்கள், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை கட்டிட பொறியியல் துறையினர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் அடங்கிய குழு 100 சதவீத கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இக்கணக்கெடுப்பு பணி இன்று (டிச.22) முடிவடைய உள்ளது. கணக்கெடுப்பு முடிவடைந்து சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த அறிக்கை வந்ததும், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: