×

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஜெயந்தி விழாவையொட்டி இசை நிகழ்ச்சி இசையமைப்பாளர் இளையராஜா பாடினார்

திருவண்ணாமலை, டிச.22: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மதுரை அடுத்த திருச்சுழியில் கடந்த 1879ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவதரித்தவர் மகான் ரமணர். நினைக்க முக்தித்தரும் திருவண்ணாமலையை தரிசித்து ஞானம் பெற்று, முக்தியடைந்தார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.
அதன்படி, ரமணர் அவதரித்த மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திர தினமான நேற்று, ரமண மகரிஷியின் 142வது ஜெயந்தி விழா ரமணாஸ்ரமத்தில் நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு ருத்ர அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனையும் நடைபெற்றது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆஸ்ரமம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில், ஆஸ்ரம நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான ரமண பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ilayaraja ,Ramanar Jayanti ,Thiruvannamalai Ramanasramam ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...