கரூர், டிச. 22: கரூர் தெரசா கார்னர் பகுதியில் இரவு நேரங்களில் புறநகர் பேரூந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக மற்றும் அரசு நிறுவனங்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருச்சி, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சுங்ககேட் பகுதிக்கு சென்று தான் பேருந்தில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து கரூர் செல்லும் புறநகர் பேருந்துகள் இரவு நேரங்களில் தெரசா கார்னர் பகுதியில் நிற்காமல் சுங்ககேட் பகுதியில் நின்றுதான் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் சுங்ககேட் பகுதியில் இருந்து இறங்கி தங்கள் வீடுகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். எனவே இந்த சிரமங்களை போக்கும் வகையில் இரவு நேரங்களில் புறநகர் பேருந்துகள் தெரசா கார்னர் பகுதியில் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரசா கார்னர் பகுதியில் புறநகர் பேருந்துகள் இரவு நேரத்தில் நின்று செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
