×

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: தாசில்தார் எச்சரிக்கை

குறிஞ்சிப்பாடி, டிச. 21: நாட்டில் பெட்ரோல் விலையை போன்றே, உரங்கள் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், விலையை கட்டுப்பாட்டில் வைக்கக்கோரி விவசாயிகள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 1,040 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் மூட்டை ஒன்றின் விலை, கடந்த 8ம் தேதி முதல் 1,700 ரூபாய் ஆனது. இதையடுத்து, வியாபாரிகள் பழைய விலையில் வாங்கப்பட்ட பொட்டாஷ் மூட்டைகளை பதுக்கி, புதிய விலையான 1,700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் அரசுக்கு புகார் தெரிவித்தனர்.

 இதையடுத்து தனியார் உரக்கடை விற்பனையை கண்காணிக்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த 8ம் தேதிக்கு முன்னர் வாங்கிய 1040 ரூபாய் என அச்சிடப்பட்ட மூட்டையை, புதிய விலையான 1,700 ரூபாய்க்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில்,  குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையது அபுதாஹிர், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், வேளாண் அலுவலர் அனுசுயா ஆகியோர் குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி பகுதிகளிலுள்ள உரக் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, பொட்டாஷ் மூட்டை இருப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மூட்டையில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்