×

தியாகராஜர் கோயிலில் பாத தரிசன விழா

திருவாரூர், டிச. 21: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற பாத தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்நிலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் நேற்று (20ம் தேதி) இந்த பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி நீலோத்தம்பாள் சன்னதி அருகே பந்தக்கால் நடும் பணி கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினந்தோறும் மாணிக்கவாசகர் ராஜ நாராயணன் மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அறநெறியார், நீலோத்தம்பாள் மற்றும் வன்மீகநாதர் சன்னதிகளில் திருவெம்பாவை ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், கல்யாணசுந்தரர் பார்வதி மற்றும் சக்கரவார அம்மன் தினசரி ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 18ம் தேதி இரவு தியாகராஜர் சன்னதியில் இருந்து புறப்பட்டு தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ராஜநாராயணன் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் (19ம் தேதி) சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்ற்றது. இதனையடுத்து நேற்று அதிகாலை 5 மணி முதல் தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடும் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜப் பெருமான் மற்றும் நடராஜரை வழிபட்டனர். மேலும் இந்த பாத தரிசன நிகழ்ச்சியையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Foot ,Thiyagaraja Temple ,
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...