நாகை, மயிலாடுதுறை மாவட்டம் நடராஜர் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

நாகை, டிச.21: நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாப்பொடி, கரும்புச்சாறு, பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை சப்த விடங்களில் ஒன்றான சுந்தரவிடங்க தியாகராஜர் நீலோத்ம்பாலுக்கு 108 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு மஹா பூர்ணாகுதி நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டு வண்ண மலர்கள் மற்றும் பட்டு சாற்றி அலங்கரிக்கப்பட்டது. பின்னர் வலது கால் பாத தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குத்தாலம்:  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.

இக்கோயிலில் கடந்த 17ம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று, திருவாதிரை திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக தொடங்கி நடைபெற்றது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருவாதிரை முன்னிட்டு நேற்று நடராஜருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பின்பு நடராஜ சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில்  பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சக்கரை பொங்கல், திருவாதிரை களி, வடை வைத்து படையல் யிட்டு மகா தீபாராதனை நடைபெற்றது ,இதில் திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி: திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதையொட்டி நேற்று அதிகாலை நடராஜருக்கும் சிவகாமி அம்மாளுக்கும், சிறப்பு அபிஷ்கம் செய்யப்பட்டு அலங்கார தோற்றத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டனர். திருக்கடையூர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட பாலாலயம் செய்யபட்டுள்ளதால் நடராஜர் வீதியுலா நடைபெறவில்லை.

Related Stories: