×

சின்னாளபட்டியில் புதர் மண்டிய அரசு உயர்நிலை பள்ளி இடிந்து விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்கள்

சின்னாளபட்டி, டிச.20: சின்னாளபட்டியில் புதர் மண்டிக்கிடக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் இடிந்து விழும் நிலையில் காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. 115 வருடம் பழமைவாய்ந்த செயல்படாத பள்ளிக் கட்டிடத்தை அகற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 1906ம் ஆண்டு ஊரின் நடுவே மார்க்கெட் அருகே அரசு துவக்கப்பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட பள்ளி பின்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. 2010ம் வருடம் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. இப்பள்ளியின் உள்ளே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்பு தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சின்னாளபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் பின்பு பாதுகாப்பற்ற நிலையில் காம்பவுண்டு சுவர் உள்ளது. 1906ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த பள்ளிக்கட்டிடம் மேற்கூரை இடிக்கப்பட்டு சுற்றுச்சுவர்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இடிந்துவிடும் நிலையில் ஓட்டுக்கட்டிடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் மாணவர்கள் கழிப்பறை செல்லும் வழியில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பள்ளியில் இடித்து அப்புறப்படுத்த வேண்டிய கட்டிடங்கள் உள்ளே விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.

இதுகுறித்து உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியைகளிடம் கேட்டபோது, நாங்கள் பலமுறை எம்.ஆர். பதிவேட்டில் பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்துங்கள், இடிந்துவிழும் நிலையில் உள்ள காம்பவுண்டு சுவரை அகற்றுங்கள், முட்செடிகளை அகற்றுங்கள் என பலமுறை எழுதி வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...