×

மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் குருமலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த இடம் தேர்வு செய்து கொடுக்கப்படும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உறுதி

அணைக்கட்டு, டிச.20: ஊசூர் அடுத்த குருமலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் சிறு தானியங்கள் மற்றும் பொருட்கள் சந்தைபடுத்த வேலூரில் உள்ள ஏலகிரி அரங்கில் இடம் தேர்வு செய்து கொடுக்கப்படும் என்று மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உறுதியளித்தார். அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை பகுதி உள்ளது. அதில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளது. மேலும், மலை கிராமங்களில் விளைவிக்கப்பட்ட சாமை உள்ளிட்ட சிறு தானியங்கள் விற்பனை செய்ய போதுமான வசதிகள் இல்லாததால், மலைவாழ் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குருமலை உள்பட அத்தியூர் ஊராட்சியில் செயல்படும் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, சென்னை மகளிர் திட்ட குழுவினர் நேற்று முன்தினம் அத்தியூருக்கு வந்தனர். பின்னர், ஊராட்சி சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வரவேற்றார். அப்போது மகளிர் சுய உதவிக்குழுவினர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள், பொருளாதார சுழ்நிலை மற்றும் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் சிறு தானியங்கள் மற்றும் விளை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக ஒரு விற்பனை மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

அப்போது மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், குருமலையில் விளையும் சிறு தானியங்களை சந்தைப்படுத்த வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் இடம் தேர்வு செய்து தரப்படும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயார் செய்யும் அனைத்து பொருட்களையும் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags : District Women's Project Director ,Kurumalai ,Women's Self Help Group ,
× RELATED மன்னார்குடியில் ரங்கோலி கோலமிட்டு...