×

பழநி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவக்கம் போலீசார் ரோந்தை அதிகரிக்க கோரிக்கை

பழநி, டிச. 18: பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருவதற்கு தொடங்கி உள்ளதால் போலீசார் ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பழநி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தற்போது ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டிற்கான தைப்பூசத் திருவிழா ஜன.12ம் தேதி துவங்குகிறது. 18ம் தேதி தைப்பூசம் திருவிழா நடக்கும். வழக்கமாக தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை காலம், பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் மற்றும் தைப்பூச திருவிழா காலம் என 3 பிரிவுகளாக வருவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை காலத்திலேயே தைப்பூசத் திருவிழா வருகிறது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போதிருந்தே பாதயாத்திரையாக வரத் துவங்கி உள்ளனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பழநி-புதுதாராபுரம் சாலை, பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். தற்போது இவ்வழித்தடங்களில் பல இடங்கள் இருள் சூழ்ந்ததாக உள்ளன. பாதைகள் சேதமடைந்துள்ளன. திருவிழா நேரத்தில் மட்டும் இவ்வழித்தடங்களில் போலீசாரால் பிரத்யேக ரோந்துப்பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். விபத்து மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வைகயில் பக்தர்கள் நலன் கருதி தற்போதிருந்தே  இவ்வழித்தடங்களில் போலீசார் ரோந்துப்பணியை துவங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani hill station ,
× RELATED பழநி மலைக்கோயிலில் நாளை முதல் ரோப்கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்