×

அகல ரயில்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட கடலூர்- சேலம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

கடலூர், டிச. 18: கடலூரில் இருந்து வடலூர், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர் வழியாக சேலத்திற்கு 180 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில்பாதை உள்ளது. இந்த பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, கடலூர்- சேலம் இடையே தினமும் 3 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. இப்பாதை அகலப்பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் அறிவித்து பணிகள் பல்வேறு கட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன. கடலூர்- விருத்தாசலம் இடையே அகலப்பாதை பணிகள் தொடங்கியதால் கடலூர்- சேலம் பயணிகள் ரயில் விருத்தாசலத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர்- சேலம் அகலப்பாதையாக மாற்றும் பணிகள் முழுமையாக முடிந்து ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இப்பணிகளுக்காக விருத்தாசலத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்கள் கடலூருக்கு நீட்டிப்பு செய்யப்படாமல் உள்ளது.

 அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தெற்கு ரயில்வே கடலூர்- சேலம் பயணிகள் ரயிலை முழுமையாக இயக்காமல் உள்ளது. இந்த ரயில் விருத்தாசலத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதால் கடலூர், வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மக்களுக்கு சேலம் செல்ல நேரடி ரயில்சேவை கிடைக்காமல் உள்ளது. இப்பகுதி வணிகர்கள், சில்லரை வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். இவர்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர்- சேலம் ரயிலை மீண்டும் இயக்கினால் இப்பகுதி வணிகர்களுக்கு உபயோகமாக இருக்கும். போக்குவரத்து செலவும் குறையும். கடலூர் மாவட்டத்தை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு புதிதாக ரயில் சேவை தொடங்கும் அதே வேளையில் கடலூரை பொருத்தமட்டில் ஏற்கனவே, செயல்பாட்டில் இருந்த ரயில்களை நிறுத்தி வருகிறது. எனவே, சேலம்- கடலூர் ரயிலை முழுமையாக இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Cuddalore-Salem ,
× RELATED வெளிநாட்டில் வேலை பார்த்தவரிடம் ₹2.50 கோடி மோசடி