×

தனியார் விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்க விவகாரத்தில் உரிய உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் கடுமையான நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் பேச்சு


பூந்தமல்லி: ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்  தனியார் தொழிற்சாலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள செயல்படாமல் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இந்தப் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் இவர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டுள்ளனர். பின்னர், திடீரென 100க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து  பூந்தமல்லி, திருவள்ளுர், நேமம் மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை நேற்று நேரில் சந்தித்து அவர்களுக்கு பழங்கள் வழங்கி நலம் விசாரித்தார். இதையடுத்து நிருபர்களிடம்  அமைச்சர் கணேசன் பேசுகையில், இந்த சம்பவத்தில் 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் பலர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். விரைவில் அவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு செல்வார்கள்.

அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அச்சப்பட தேவையில்லை. சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு அரசு மூலம் பஸ் வசதி செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்படும். விடுதியில் சாப்பிட்ட உணவால் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி இல்லாமல் விடுதி நடத்தி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் உள்ளது என்பதை குறிப்பிட்டு தெரிவித்தால் அந்த நிறுவனத்தை தடை செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த விடுதி முறையான உரிமம் பெற்று உரிய வசதிகளுடன் இயங்கியதா என்பதை ஆய்வு செய்து உரிமம்  இல்லை என்றால் அதை தடை செய்ய அரசு தயங்காது. இவ்வாறு அமைச்சர் சி.வி. கணேசன் பேசினார். இதில், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், நகர செயலாளர் ரவிக்குமார் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Labor ,Minister ,CV Ganesan ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...