×

அருப்புக்கோட்டையில் வடியாத மழைநீர்; குளம் போல காட்சி தரும் குடியிருப்புகள்: வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்

அருப்புக்கோட்டை, டிச. 16: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி செல்வவிநாயகர் நகர் குடியிருப்பு பகுதியில் 20 நாட்களாகியும் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலையம்பட்டி கிராம ஊராட்சி. இங்கு பாலையம்பட்டி கட்டங்குடி செல்லும் சாலையில் செல்வவிநாயகர் நகர் உள்ளது. பாலையம்பட்டி செவல்கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள இந்த நகரில் 30க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் உள்ளன. தற்போது 5 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் செவல் கண்மாய் 23 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்து மழைநீர் அருகில் உள்ள இந்த நகருக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்ததால் அடிக்கடி தண்ணீரை அப்புறப்படுத்தி வந்தனர். ஆனாலும், தண்ணீர் வருவது நிற்கவில்லை. இதனால் இந்த நகரில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்கு காரணம், கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் மழைநீர் வடியாதது தான். எனவே, வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். கண்மாய் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என இப்பகுதி மக்கள் வருவாய்துறையினரிடம் புகார் செய்தனர்.

இந்நிலையில் மண்டல துணை வட்டாட்சியர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், விஏஓ சத்தியராஜ், கிராம உதவியாளர் சூர்யமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் செவல்கண்மாய் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்