×

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா

திருப்பூர், டிச.16: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு மைதானம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்தில் 11.2 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, ரூ.9 கோடி மதிப்பில் உயர்தர விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

கல்லூரிக்கு எதிர்காலத்தில் புதிய பாடப்பிரிவுகள், ஆய்வகங்கள் கட்டுவதற்கு இட வசதியில்லை என்றும், இதனால் கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கண்டித்தும், உடனடியாக பணியை கைவிடக்கோரியும், வேறு இடத்தில் விளையாட்டு மைானம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி நுழைவு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைதானம் அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirupur Sikkanna Government College ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்