திருவண்ணாமலை, டிச.15: திருவண்ணாமலை மாவட்டத்தில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹30.22 கோடி வங்கிக்கடன் மற்றும் நிதியுதவியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் மாநிலம் முழுவதும் வழங்கும் நிகழ்ச்சியை, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மகளிர் சுயஉதவி குழுவினரிடம் காணொலி காட்சி மூலம் பேசினார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் சி.கெங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த துளசி மகளிர் குழுவினரிடம் முதல்வர் கலந்துரையாடினார்.
இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுவினருக்கு வங்கிக்கடன் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2,874 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, ₹30.22 கோடி வங்கிக்கடன் மற்றும் நிதியுதவியை வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: மகளிர் சுயஉதவி குழுவை தர்மபுரி மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கி வைத்தவர் கலைஞர். துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தபோது, தமிழகம் முழுவதும் பயணம் செய்து, சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவியை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில், சுமார் நான்கரை மணி நேரம் நின்றபடி மகளிர் குழுக்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சுயஉதவி குழுக்கள் நலிவடைந்துள்ளன. எனவே, முதல்வராக பொறுப்பேற்றதும் சமூக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ₹20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தற்ேபாது தமிழகம் முழுவதும் ₹3 ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 395 பேரும், நகர பகுதிகளில் 29 ஆயிரத்து 530 பேரும் மகளிர் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டு 1,132 புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம், 431 குழுக்களுக்கு ₹21.82 கோடி வங்கிக்கடன், 1,202 குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ₹6.50 கோடி, 532 குழுக்களுக்கு சுழல் நிதி ₹82 லட்சம், 639 குழுக்களுக்கு நலிந்தோர் நிதி ₹1.3 கோடி உள்பட ₹30.22 கோடி வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு படிப்பதற்கான உரிமை, வாக்குரிமை வழங்கியது திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, காவல்துறையில் பணி வழங்கியவர் கலைஞர். அதேபோல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஒரு ஆண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியதும் திமுக ஆட்சிதான். திருவண்ணாமலை மாவட்டத்தில், 86 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மகளிர் குழுக்களை சேர்ந்த 2 லட்சத்து 20 ஆயிரத்து 592 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். எனவே, இந்த மாவட்டம் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலையை அடைய மகளிர் குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன், கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, அருணை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
