×

வேப்பூர் அருகே பரபரப்பு தேசிய வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்  போலி ரசீது கொடுத்து பல லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள்

வேப்பூர், டிச. 15: வேப்பூர் வட்டம் மங்களூரில் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் (59), அவரது மகன் சங்கரன் (37) ஆகியோர் நகை மதிப்பீட்டாளர்களாக உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் மேலாளராக உள்ளார். இவர் உடல் நலக்குறைவால் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நகை மதிப்பீட்டாளர்கள் சேர்ந்து, நகைக்கடன் பெற்று வட்டி கட்ட வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் வரவு வைக்காமல் பணம் பெற்றுக்கொண்டதற்கு போலி ரசீது போட்டுக்கொடுத்து மோசடி செய்துள்ளனர். அதேபோல நகையை மீட்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் கூட்டமாக இருப்பதாகவும், வங்கி மேலாளர் விடுமுறையில் உள்ளார் என பல்வேறு காரணங்களை கூறி, பின்னர் வந்து நகையை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நகை மீட்பதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு கையெழுத்து இல்லாத போலி ரசீது வழங்கி வந்துள்ளனர்.

மேலும் நகையை வழங்காமல் வாடிக்கையாளர்களை அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று திடீரென வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அமிர்தவல்லி, பெரியசாமி, பொன்னுசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வங்கி மேலாளர் விசாரித்ததில் வாடிக்கையாளர்களிடமிருந்து நகைக்கடன் மீட்க பெறப்பட்ட அசல், வட்டித்தொகை வங்கியில் செலுத்தாமல் நகை மதிப்பீட்டாளர்கள் போலி ரசீது வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே நகை மதிப்பீட்டாளர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : National Bank ,Veppur ,
× RELATED ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன்