×

தக்கலை அருகே மர்ம சாவு பைனான்ஸ் உரிமையாளரின் செல்போன் ஆய்வு உறவினர்கள் பகீர் புகார்

நாகர்கோவில், டிச.15 :  தக்கலை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய பைனான்ஸ் உரிமையாளர் மர்ம சாவு தொடர்பாக அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். குமரி மாவட்டம் தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (36). இவர் ரப்பர் ஷீட் வாங்கி விற்பனை செய்யும் தொழில், பைனான்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவி இறந்த நிலையில், 2 வதாக வேறொரு பெண்ணை அய்யப்பன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை தக்கலை அருகே மருந்துக்கோட்டையில் இருந்து குமாரகோவில் செல்லும் புத்தனார் சானல் ரோடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் அய்யப்பன் சடலமாக கிடந்தார். அந்த வழியாக சென்ற ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள், இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அய்யப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடன் பிரச்னை இருந்ததால், அய்யப்பன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இதில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக அய்யப்பனின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

இது குறித்து அய்யப்பனுக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் கூறியதாவது : அய்யப்பனிடம் பணம் கேட்டு தொடர்ந்து சிலர் மிரட்டி வந்தனர். முதல் மனைவி இறந்த நிலையில், அந்த வழக்கை திசை திருப்பி விடுவோம் என கூறி மிரட்டியவர்கள், அவ்வப்போது லட்சக்கணக்கில் பணம் வாங்கி சென்றனர். பலமுறை தனது நண்பர்களிடம் இது குறித்து கூறி அவர் வருத்தப்பட்டுள்ளார். செல்போனிலும் தொடர்ந்து மிரட்டினர். இவர்களுக்கு பணம் கொடுத்தே அய்யப்பனின், சேமிப்பு அனைத்தும் குறைந்துள்ளது. இதனால்  தொழில் முடங்கியது. கடந்த இரு நாட்களுக்கு முன், தொழில் நிறுவனத்துக்கு நேரடியாக வந்து அய்யப்பனை மிரட்டினர். இதனால் அய்யப்பன் பயந்து போன நிலையில் இருந்துள்ளார். கடன் பிரச்னையால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை.

அவரை தொடர்ந்து மிரட்டிய நிலையில், இந்த மரணம் நடந்து இருப்பதால் இது கொலையாக கூட இருக்கலாம். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அய்யப்பனின் வேஷ்டி கூட கலையாத நிலையில் இருந்துள்ளது. அவராக தூக்கில் தொங்கினால் நிச்சயம் கை, கால்களை உதறி இருப்பார். இதில் வேஷ்டி அவிழ்ந்து விட கூட வாய்ப்பு உண்டு. ஆனால் வேஷ்டி மடிப்பு கலையாமல் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அய்யப்பனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து கிளம்பிய 15 நிமிடங்களிலேயே செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால் அவரது மனைவி பல இடங்களில் தேடி இருக்கிறார். இந்த நிலையில் தான் சடலமாக அய்யப்பன் கிடந்துள்ளார். அய்யப்பனை கொலை செய்து பின்னர் தூக்கில் தொங்க விட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வழக்கை தற்கொலை வழக்கு என முடிக்காமல் போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அய்யப்பனின் செல்போனில் உள்ள ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். உரையாடல்கள் பதிவு அழிக்கப்பட்டு இருந்தால், அவற்றை சைபர் க்ரைம் போலீஸ் மூலம் மீள் பதிவு பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர். இதற்கிடையே அய்யப்பனின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், மேல் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. அவரது தொழில் நிறுவனங்களில்  உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். கடிதம், டைரி குறிப்புகள் உள்ளதா? என்பதையும் சோதனை செய்தனர்.

Tags : Thakkala ,Pakir ,
× RELATED தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து