×

நாகை மண்டலத்தில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க 21 கூடுதல் நடை பஸ்கள் இயக்கம்


நாகை, டிச.13: நாகை மண்டலத்தில் இயங்கும் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் பயணிகள் பயணம் செய்வதை தடுக்க 21 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுவதாக மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குடந்தை கோட்டம் நாகை மண்டல எல்லைக்குள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மண்டல எல்லையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க நாகை மண்டலம் சார்பில் கூடுதல் பஸ்கள் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாகை மாவட்டத்தில் திட்டச்சேரிக்கு ஒரு பஸ் மூலம் கூடுதலாக 2 நடைகள் இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணி ஆர்ச், பரவை, புத்தூர், சிக்கல், கீழ்வேளூர், வாய்மேடு, நாகூர் ஆகிய பஸ்ஸ்டாப்களில் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலை கல்லூரிக்கு 5 பஸ்கள் மூலம் 14 நடைகளும், கோமல் ரோட்டிற்கு ஒரு பஸ் 2 நடைகளும் கூடுதலாக இயக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திரு.வி.க அரசு கலை கல்லூரிக்கு 3 பஸ்கள் மூலம் 6 நடைகளும், மன்னார்குடியில் இருந்து எளவனூருக்கு ஒரு பஸ் மூலம் 2 நடைகளும், நீடாமங்கலத்திற்கு ஒரு பஸ் மூலம் 2 நடைகளும், பரவக்கோட்டைக்கு ஒரு பஸ்கள் மூலம் 2 நடைகளும் இயக்கப்படுகிறது. திருவாரூர் முதல் மயிலாடுதுறை வரையிலான முக்கிய வழித்தடங்களில் 2 பஸ்கள் மூலம் 6 நடைகள் இயக்கப்படுகிறது. கொற்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 4 பஸ்கள் மூலம் 14 நடைகளும், தண்டலச்சேரி அரசு கல்லூரிக்கு 2 பஸ்கள் மூலம் 4 நடைகளும் இயக்கப்படுகிறது. படிக்கட்டுகளில் நின்று பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்கவும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் நாகை மண்டலம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Naga Zone ,
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...