×

நிரம்பி வழியும் காட்டேரி அணை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கோடையில் தண்ணீர் பிரச்னை இருக்காது

ஊட்டி, டிச. 11: ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அணை நிரம்பி வழிவதால், கோடையிலும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.  ஊட்டி அருகேயுள்ள காட்டேரி பகுதியில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மருந்துகள் தயாரிக்கவும், இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் மழை பெய்தால், இந்த அணை நிரம்பி வழியும். அதேசமயம், பருவமழை பொய்த்தால், அணையில் தண்ணீர் குறைந்து வெடிமருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும். குறிப்பாக, கோடை காலங்களில் சில சமயங்களில் போதிய தண்ணீர் இருக்காது.

இந்நிலையில், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஆறு மாதங்களாக கொட்டி தீர்த்தது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக கேத்தி பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வடகிழக்கு மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், காட்டேரி அணையில் தண்ணீர் ஆர்பரித்தது. தற்போது வரை அணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த அணைக்கு வரும் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், கோடை வரை அணையில் தண்ணீர் அளவு குறைய வாய்ப்பில்லை. எனவே, இம்முறை கோடையில் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags : Aruvankadu ,
× RELATED 3 ஆடுகளை தாக்கி கொன்று காற்றாலை நிழலில் ஓய்வெடுத்த பெண் சிங்கம்