×

ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் செய்து குறைந்த விலைக்கு வாகனம் தருவதாக மோசடி: போலி ராணுவ அதிகாரிக்கு வலை

சென்னை: ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்வதாக மோசடி செய்த போலி ராணுவ அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர். ராணுவ அதிகாரி என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக சென்னையில் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம்  குறைந்த விலையில்  கார், பைக் மற்றும் ஆர்சி புக் உள்ளிட்டவை வெளியிட்டு மோசடி செய்வதாக மாநகர போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மணலி குப்பு தெருவைச் சேர்ந்த மாயாண்டி (30), பழைய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடும்போது பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசிக்கும் சிவசாந்த் மல்லப்பா என்பவர் தன்னை ராணுவ அதிகாரி என்றும், தற்போது மாற்றலாகி செல்வதால்  தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்து உண்மை என்று நம்பிய மாயாண்டி ஹோண்டா ஆக்டிவா 5ஜி வாகனத்தை வாங்குவதற்கு ரூ.24 ஆயிரத்துக்கு கூகுள் பே மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், இருசக்கர வாகனம் ஆர்மி போஸ்டல் சர்வீஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு ரூ.14000ம் அனுப்பும்படியும்,  பின்னர் அந்த பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் சிவசாந்த் மல்லப்பா கூறி உள்ளார். இதை நம்பி ரூ.14 ஆயிரத்தை அவர் அனுப்பி உள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை தராமல் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மாயாண்டி அந்த நபரிடம் இருசக்கர வாகனம் வேண்டாம். பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் கொடுக்காமல் ஏமாற்றி போன் இணைப்பை துண்டித்து உள்ளார். இதுகுறித்து மாயாண்டி மாதவரம் பால்பண்ணை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ராணுவ அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : OLX ,
× RELATED வாடிக்கையாளரிடம் பல லட்சம்...