×

வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் திறப்பால் விளாத்திகுளம் வைப்பாற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு

விளாத்திகுளம், டிச. 7:   தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டை அணை நிரம்பியது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விளாத்திகுளம் வைப்பாற்றிற்கு நேற்று முன்தினம் மாலை முதல் நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் விளாத்திகுளம் பழைய பாலத்தின் மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. நேற்று காலை நீர்வரத்து சற்று குறைந்தது. இதனிடையே வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம்  தொடர்ந்து உயர்ந்து வந்ததால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட நீரானது வெம்பகோட்டை, சூலூர் சந்தை இருக்கன்குடி, சாத்தூர், நென்மேனி,  முத்துலாபுரம், ஆற்றங்கரை அணைக்கட்டு, சித்தநாயக்கன்பட்டி வழியாக விளாத்திகுளத்திற்கு நேற்று மாலை வெள்ளமாக வந்தடைந்தது.

 குறிப்பாக இந்த வெள்ள நீரானது மந்திகுளம் அணைக்கட்டு, விருசம்பட்டி அணைக்கட்டு, வைப்பார் அணைக்கட்டு ஆகியவற்றை கடந்து சிப்பிகுளம் கிராமத்தில் கடலில் கலக்கிறது. இதனிடையே 10  ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பாலத்திற்கு மேல் பெருக்கெடுத்து வந்த வெள்ளநீரை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று பார்வையிட்டனர்.இதனிடையே விளாத்திகுளம் சிறப்பு நிலை  பேரூராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் வெள்ளம் குறித்து மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை   விடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால்  பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மேலும்  மற்ற பயன்பாட்டிற்காகவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Vilathikulam ,Vembakkottai dam ,
× RELATED வெம்பக்கோட்டை அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக நீர் வெளியேற்றம்..!!