×

23 ஆண்டுகளாக பணிபுரியும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

தஞ்சை, டிச. 6: ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பதவி உயர்வின்றி 23 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்த்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர். டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு மாநில நிர்வாகி மணிசேகரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள், டாக்டர் அம்பேத்கர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக, 1997 முதல் 1999ம் ஆண்டில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைகளின் படி, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எஸ்.சி., எஸ்.டி., இனத்தை சார்ந்தவர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்காக, பி.எட்., கல்வி தகுதியை பதிவு செய்து காத்திருந்தவர்களில், பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இடைநிலை ஆசிரியராக நிலை இறக்கி, அதற்குரிய ஊதியத்தில் சில நிபந்தனைகளை விதித்து பணியில் சேர்ந்தோம்.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் சுமார் 120 ஆசிரியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி ஒரே பதவியில் பணிபுரிந்து வருகிறோம். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணி செய்வது போல், பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள், தொடக்கக் கல்வி துறை பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் இதே போல ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி பணி செய்து வருகிறார்கள். இதில், அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பதவி உயர்வு வழங்கப்படாத காரணத்தினால் 65 ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி பாதிக்கப்பட்டு தற்சமயம் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் உள்ளோம். நிபந்தனைகள் நீக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட எங்களை தனி சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து பட்டதாரி ஆசிரியராக நிலை உயர்த்தியும், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அதே பணியிடத்தில் நிலை உயர்வு (அப்க்ரேட்) தர கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adithravidar Welfare School ,
× RELATED புத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டிடம் சேதம்