×

2வது அலை பரவல் எதிரொலி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுமா?

வீரவநல்லூர், ஏப்.15: சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன்கருதி கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அடுத்தப்படியாக அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதி சேரன்மகாதேவி பேரூராட்சி. இங்கு சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஏ.எஸ்.பி அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களும், தனியார் தொழிற்சாலைகளும் உள்ளது. பஸ்நிலையம் அருகே பல்வேறு பிரிவுகளுடன் 40 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.  இம்மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் வசதி செய்து கொடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி அரசு மருத்துவ மனையில் அனைத்து வசதிகள் இருந்தும் கொரோனா தடுப்பூசி வசதி இல்லாததால் பொதுமக்கள் பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பஸ் அல்லது ஆட்டோ மூலமாக மட்டுமே அங்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் இருந்தும் சேரன்மகாதேவி மருத்துவமனையில் வசதி இல்லாததால் வயோதிகர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி வசதி செய்து தரவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

அலைக்கழிக்கும் லேப் டெக்னிஷியன்?
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு பணிபுரியும் லேப் டெக்னிஷியன் மக்களுக்கான சேவையில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருபவர்களிடம் நண்பகல் 12 மணிக்குள் வந்தால்தான் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இல்லையென்றால் பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறுகிறார்.  டாக்டர்கள், செவிலியர்கள் முகம்சுழிக்காமல் சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால் லேப் டெக்னிஷியன், பரிசோதனைக்கு வருபவர்களை பத்தமடைக்கு செல்ல வற்புறுத்துவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Cheranmakhadevi ,Government Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...