×

நாமகிரிப்பேட்டை அருகே பனிவரகு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.13:நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில், பனிவரகு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கோடைகாலங்களில் பனிவரகு அரிசியை கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும், சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் திறன் கொண்ட பனிவரகு, மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, பனிவரகு சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் கூறியதாவது:

பனிவரகு சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு 1000 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். பயிர் செய்து 45 நாட்களில் கதிர்கள் முதிர்வடையும். 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இதற்கு அதிகமான உரங்கள் தேவையில்லை. விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக வந்து, கிலோ ₹40க்கு வாங்கி சென்று, அதனை மதிப்புக்கூட்டி மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்கின்றனர். தற்போது சிறுதானியங்களின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பனிவரகின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக அரசு சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...