×

வலங்கைமான் தாலுகாவில் 1000 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி தீவிரம்

வலங்கைமான், ஏப்.12: வலங்கைமான் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி கடந்த பருவத்தில் செய்யப்பட்டிருந்தது. பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை முற்றிலும் அறுவடை செய்ய இயலாமல் போனது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

மேலும் கால்நடைகளுக்கான வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டது. பருவம் தவறி ஜனவரி மாதம் மழை பெய்த மழைகாரணமாக நெல் அறுவடைக்குப்பின் கோடை சாகுபடியாக பயறு, உளுந்து சாகுபடி செய்ய இயலாமல் போனதால் விவசாயிகளுக்கு அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கோடை சாகுபடியாக வலங்கைமான் தாலுகாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை அடுத்து இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தற்போது வலங்கைமான் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வலங்கைமான் தாலுகாவில் ஆதிச்சமங்கலம், லாயம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டாத நிலையில் குறைந்த அளவு பரப்பளவில் தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உரச்செலவு மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் செலவாகும் நிலையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மிகவும் சிரமத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பருத்தி சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக குறைந்த நிலையில் தற்போது டிராக்டர் மூலம் மண்ணை கிளறுதல், மண் அணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tags : Valangaiman taluka ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...