×

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,ஏப்.12: விவசாய உரங்களின் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) அறிவித்துள்ளது
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உரம் மற்றும் இடு பொருட்களுக்கான விலை தொடர்பான அனைத்து அதிகாரத்தையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்க வேண்டும். இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக தற்போது உர விலையை உற்பத்தி நிறுவனங்களே எந்த கட்டுப்பாடுமின்றி விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற முடிவின் தொடர்ச்சியாக, தற்போது 60 சதவீத விலை உயர்வு விவசாயிகளை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஏற்கனவே டிஏபி விலை ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விலை ரூ.1,900 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் யு+ரியா தவிர அனைத்து உரங்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளையும், பொதுமக்களையும் கடுமையான பாதிப்படைய செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் மத்திய அரசால் நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Farmers' Union ,Tanjore ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...