×

கேத்தி, பாலாடா பகுதியில் கூலி இன்றி கிராம மக்களை வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்

குன்னூர்,ஏப்.10: குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி கேத்தி பாலாடா. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சமீபத்தில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பல நாட்கள் ஆகியும் அதற்கான குழாய் இணைப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது.
கேத்தி பாலாடா பகுதி பொது மக்கள் பேரூராட்சியில் முறையிட்டனர். ஆனால் அதிகரட்டி பேரூராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகரட்டி பேரூராட்சியின் கீழ்கேத்தி பாலாடா பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க ஒப்பந்தம் எடுத்தவரோ பொது மக்களை இலவசமாக வேலை வாங்கி வருகின்றார். தண்ணீர் குழாய்களை சாலையில் இருந்து நீண்ட தூரம் சுமந்து செல்ல வேண்டும் என்பதால் அப்பகுதி மக்களையே சுமந்து வரும்படி தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்களும் தண்ணீர் குழாய்களை சுமந்து சென்றனர். தற்போது தண்ணீர் குழாய்களை பொருத்துவதற்கான கப்பிளிங் போன்ற பொருட்களை மக்களே இலவசமாக வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தண்ணீர் குழாய்களை விரைவில் அமைத்து தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kathy ,Balada ,
× RELATED நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின்...