×

கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டி இளைஞர் விடுதியில் கோவிட் கேர் மையம் துவக்கம்

ஊட்டி,ஏப்.10: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் லேசான பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கோவிட் கேர் மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 40க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த சூழலில் தற்போது கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.
லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஊட்டி, குன்னூர், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் கோவிட் கேர் மையங்களை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக லேசான அறிகுறிகள் உள்ள 20 பேர் ஊட்டி இளைஞர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Govt Care Center ,Ooty Youth Hostel ,
× RELATED `அட்மிட்’ அதிகம்-டிஸ்சார்ஜ் குறைவு;...