7 குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்

சென்னை: சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடைமுறை நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. நாளுக்கு நாள் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னை முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

நேற்று கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியில் 600 வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சோதனையின் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. அதன்படி, மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்குள்ள 7 குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்புகளுக்குள் வெளி ஆட்கள் யாரும் செல்லாத வகையில் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>