×

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட எண் 290 கொண்ட வாக்குச்சாவடி மையத்தில், கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் 795 வாக்காளர்கள் இரவு 7 மணி வரை வாக்களித்தனர். 7 மணிக்கு பிறகு வாக்குப்பதிவை நிறுத்தி, வாக்காளர்களை மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இந்தவேளையில், வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்ற இளைஞர் ஒருவர், வாக்கு இயந்திரத்தில் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளார். இதைக்கண்ட, மற்ற கட்சியினர் வாக்குப்பதிவு நிறுத்திய பிறகு எப்படி வாக்கு இயந்திரத்தில் கூடுதலாக வாக்குப்பதிவு செய்ய முடியும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் காலையில் இருந்து தேர்தல் முடியும் வரை வந்த பட்டியலை ஆய்வு செய்தபோது மொத்தம் 795 வாக்காளர்கள் வாக்களித்தது தெரிந்தது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தை ஆய்வு செய்துபோது கூடுதலாக 2 வாக்குகள் சேர்த்து 797 வாக்குகள் பதிவாகி இருந்ததை கண்டு கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, எனவே, உடனடியாக இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமியிடம் கேட்டபோது, வையாவூர் கிராமத்தில் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடி மையத்தில் பதிவான கூடுதல் வாக்குகள் வாக்கு எண்ணும் பொழுது சேர்க்கப்பட மாட்டாது. இதுபற்றிய விளக்கங்களை காஞ்சிபுரம் தேர்தல் பார்வையாளரிடம் முறையாக தெரியப்படுத்திவிட்டோம் என்றார்.

Tags : Kanchipuram ,Assembly ,Vaiyavur ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...