காரைக்குடியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம் அறைகளை டிவி மூலம் பார்க்கும் வசதி

சிவகங்கை, ஏப்.9: காரைக்குடியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை எல்இடி டிவி மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்.6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, மானாமதுரை(தனி), திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மே.2ம் தேதி காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியிலேயே நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளின் தன்மையை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அழகப்பா பொறியியல் கல்லூரியின் முகப்பு வாயிலில் பார்வை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி டிவிக்கள் மூலம் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் நிலையை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஒரு தாசில்தார் தலைமையில் 10 பேர் கொண்டு குழு தினமும் சுழற்சி முறையில் கண்காணிக்கும். இவர்களது பணியை தினசரி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வர். நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் வாக்கு இயந்திர பாதுகாப்பு அறை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

Related Stories:

>