×

சங்கரன்கோவில் அருகே தோட்டங்களில் பூத்துக்குலுங்கும் கேந்திப்பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை

திருவேங்கடம், ஏப்.9:விளைச்சல் இருந்து விலை இல்லாததால் கேந்திப்பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் பறிக்காமல் விட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கரிசல்குளம், அழகாபுரி, பெருங்கோட்டூர், குருவிகுளம், அழகனேரி, வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், அழகுநாச்சியார்புரம் போன்ற பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மல்லிகை, பிச்சி, அரளி, சம்பங்கி, கனகாம்பரம், கேந்தி, சேவல் கொண்டை போன்ற பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டு வருகிறார்கள். தோட்டங்களில் சாகுபடி செய்த பூக்களை சங்கரன்கோவில், கழுகுமலை, கோவில்பட்டி, குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டிற்கும் அனுப்பி வருகிறார்கள். தற்போது உள்ள தட்பவெப்ப நிலையில் கேந்திப்பூ நல்ல விளைச்சலை எட்டியுள்ளது.  ஆனால் மார்க்கெட்டில் கேந்திப்பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூரை சேர்ந்த விவசாயி ஜான்பாண்டியன் கூறியதாவது,

என்னுடைய தோட்டத்தில் கேந்தி, சேவல் கொண்டை பூ பயிரிட்டுள்ளேன். சேவல் கொண்டை பூ 3 மாத பயிராகும். கேந்திப்பூ பயிரிட்டதில் இருந்து தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால் 45 நாட்களில் பூக்கள் அறுவடைக்கு வரும். அப்போது பூ பெரிதாக இருக்கும். நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சிறிய பூவாக மாறி விடும். கடந்த ஆண்டு மார்க்கெட்டில் ஒரு கூறு (2கிலோ) ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. தற்ேபாது ரூ.30 முதல் 50க்கு வியாபாரிகள் ஏலம் எடுக்கிறார்கள். போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்த விலைக்கு ஏலம் போவதால் பறிப்பு கூலி கூட  கிடைக்காது. இதனால் நான் தோட்டத்தில் பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டேன். எனவே சங்கரன்கோவில் பகுதி பூ விவசாயிகளின் நலன் கருதி அரசே பூக்களை கொள்முதல் செய்து பூ விவசாயிகளை காக்க வேண்டும் என்றார்.

Tags : Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா