×

சேரன்மகாதேவியில் சிதலமடைந்த அரசு ஊழியர் கட்டிடம் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பாக மாறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வீரவநல்லூர், ஏப். 8:  சேரன்மகாதேவியில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த அரசு அலுவலர் அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பாக கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். சேரன்மகாதேவியில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் நலன்கருதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கடந்த 1982ம் ஆண்டு கட்டப்பட்ட மூன்றடுக்கு அடுக்கு மாடி  குடியிருப்பை அப்போதைய துணை சபாநாயகர் பி.எச்.பாண்டியன் திறந்து வைத்தார்.  இதில் ஒரு பிளாக்கில் 12 வீடுகளும், இன்னொரு பிளாக்கில் 6 வீடுகளும், மற்றொரு பிளாக்கில் 18 வீடுகள் என மொத்தம் 36 வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 35 ஆண்டுகளை கடந்த இக்கட்டிடமானது முறையான பராமரிப்பின்றி மெல்லமெல்ல அதன் ஸ்திரத்தன்மையை இழந்தது.

வீட்டின் சிலாப்புகள் மற்றும் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழத் துவங்கியதால் அதில் குடியிருந்தவர்கள் இடம் பெயர்ந்தனர். தொடர்ந்து சிதிலமடைந்த இக்கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவர் கூட குடியமரவில்லை. இதையடுத்து இப்பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறியது. பகலில் வகுப்புகளுக்கு செல்ல விரும்பாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கு புகலிடம் பெறுவதும் தொடர்ந்தது. மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் முக்கியப் பிரமுகர் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவர் இங்கேயே முகாமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமூகவிரோத விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள இந்த பாழடைந்த  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இடித்து அகற்றிவிட்டு குடிசை மாற்று வாரியம் மூலம் இடமில்லா ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Cheranmakhadevi ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...