ஓவேலி, கூடலூர் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கூடலூர், ஏப்.5: கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசிலிங்கம் நேற்று  ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர், சபோக், லாரஸ்டன் நம்பர் 4, தர்மகிரி, மஞ்ச மூலை, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன்வயல் பஜார், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட காசிம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற பகுதிகளில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து கூடலூர் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நகராட்சி அலுவலக வளாகத்தை ஒட்டி துவங்கிய பேரணி கூடலூர் புதிய பேருந்து நிலையம் சுங்கம் ரவுண்டானா பகுதி வரை சென்று திரும்பி பழைய பேருந்து நிலையம் வழியாக காந்தி திடலில் முடிவடைந்தது.

இதில் திமுக, காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., முஸ்லிம் லீக், விசிக, மனிதநேய மக்கள்  கட்சி, மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான  தொண்டர்கள் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் காசிலிங்கம் பேசியதாவது:

தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிைடக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கல்விக் கடன், வங்கி கடன், நகைக் கடன் உள்ளிட்டவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.டேன் டீ தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூ., வாசு, இந்திய கம்யூ., முகமது கனி, காங்கிரஸ் அம்சா, அப்துல்ரகுமான், ஷாஜி, விசிக சகாதேவன், ராஜேந்திரபிரபு, முஸ்லிம் லீக் ஹனிபா, மமக சாதிக் பாபு, மதிமுக பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>