×

புன்னப்பாக்கம் கிராம ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்: தேர்தலை புறக்கணிக்க முடிவு

ஊத்துக்கோட்டை, ஏப். 2: புன்னப்பாக்கம் கிராம ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய  கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நெல், வேர்கடலை மற்றும் மல்லி, முல்லை, சாமந்தி போன்ற பூ வகைகளையும் இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இக்கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் எடுப்பதற்காக குவாரி ஏலம் விடப்பட்டது. இதனால், கடந்த மாதம் மார்ச் 18ம் தேதி  காலை  ஏரியில் மண் எடுப்பதற்காக 6 பொக்லைன் இயந்திரங்கள் ஏரியின் உள்ளே வந்தது. இதையறிந்த, அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி ஏன் ஏரியின் உள்ளே வந்தீர்கள் என கேட்டனர். இதை கேட்ட அவர்கள் இங்கு சவுடு மண் குவாரி விடப்பட்டுள்ளது.

அதனால், மண் எடுக்க வந்தோம் என்றனர். இதையறிந்த மக்கள் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிதான் அதில் நீங்கள் மண் எடுக்கக்கூடாது என்றனர். அப்போது, அதையும் மீறி மண் எடுக்க முற்பட்டபோது, பொக்லைன் எந்திரங்களை ஏரியிலிருந்து வெளியேற்றி  மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் மண் எடுக்க 50 லாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுத்தனர். இதையறிந்த, கிராம மக்கள் ஏரிக்கு வந்து மண் எடுக்க வந்த  பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர், வெங்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். இதில், சமாதானம் ஆகாத மக்கள் குவாரியை நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தும், குவாரியை நிறுத்தாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தற்காலிகமாக குவாரி மூடப்பட்டது. பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், புன்னப்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Punnapakkam ,
× RELATED தாமரைப்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட...