தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்குசேகரிப்பு

கோவை, ஏப். 1: கோவை மைல்கல் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். கோவை தொண்டாமுத்தூர்  தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று சுண்டக்காமுத்தூர்,  குனியமுத்தூர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு  பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்பு அளித்தனர். குனியமுத்தூரில் சிறுவர்கள், சிலம்பம் சுற்றி அவரை வரவேற்றனர். அப்போது அவர்  பேசியதாவது: குனியமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள்  அனைத்தும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் கூட்டுக்குடிநீர் திட்டம்,  விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில்  கண்டுள்ளது. அதிமுக ஆட்சியில் என்னுடைய முயற்சியால் 6 கல்லூரிகள் கோவைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி  கனவு நனவாகியுள்ளது.

கொரோனா தடுப்பு ஊரடங்கு அறிவித்ததும், மக்களுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். சமையல் பொருட்கள்,  கிருமி நாசினி மற்றும் கபசுர குடிநீர் வழங்கினோம். மக்கள் நலனில் அதிக  அக்கறை கொண்டது அதிமுக அரசு. எனவே வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை  இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதன்பின்னர், நேற்று மாலை பாலக்காடு மெயின் ரோடு மைல்கல் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்கள் ஒயிலாட்டம் ஆடி, அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் சேர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சுமார் ஐந்து நிமிடம் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். இந்த காட்சி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Stories: