×

திருவள்ளூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி தயார் நிலையில் நடமாடும் மருத்துவக்குழு

திருவள்ளூர், ஏப் . 1: சட்டமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், நடமாடும் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை இருக்கும். வெட்டவெளியாக இருக்கும் இடங்களில் பொதுமக்கள் நின்று வாக்களிப்பது சவால்தான். அதிகபட்ச வெயில் அடிப்பதால், ‘சன் ஸ்ட்ரோக்’ ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உடல்நிலை சரியில்லாதவர்கள் காத்திருந்து வாக்களிப்பது சிரமமாக இருக்கும்.

இதையடுத்து, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நடமாடும் மருத்துவக் குழு வீதம் 10 நடமாடும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், அவசரம் என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று மருத்துவ உதவி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur ,Assembly elections ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...