×

கேசவபுரம் கண்மாயில் அரைகுறையோடு நின்று போன குடிமராமத்து பணி தூர்வார கோரிக்கை

கம்பம், ஏப். 1: கம்பம் அருகே கேசவபுரம் கண்மாயில் குடிமராமத்து பணியில் செய்யாமல் போன தூர்வாரும் பணியை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி, காமயகவுண்டன் பேரூராட்சிக்கு இடையே உள்ளது கேசவபுரம் கண்மாய். மழை காலங்களில் மேகமலை வனப்பகுதியில் வரும் தண்ணீர் யானை கஜம் ஓடை வழியாக கேசவபுரம் கண்மாயை வந்தடைகிறது. பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் 103.81 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை, திராட்சை விவசாயம் நடைபெற்று வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் இக்கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்தி, மடை எண்-1, மடை எண்-2ல் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் செய்தனர்.

இதில் மடை மறு கட்டுமான பணிகள் செய்து முடித்தபோது மழைக்காலம் தொடங்கியது. மேலும் கண்மாயில் தண்ணீர் இருந்ததால் தூர்வார முடியவில்லை. கரையை முழுமையாக பலப்படுத்தவும் இல்லை. தற்போது வனப்பகுதியிலிருந்து வரும் மழை தண்ணீர் யானை கஜம் ஓடை வழியாக கேசவபுரம் கண்மாயை வந்தடையும் வகையில் ரூ.4 கோடி செலவில் வரத்து கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. கண்மாயை தூர்வாராததால் இத்தண்ணீரை கண்மாயில் சேமிப்பதிலும் பிரச்னை உள்ளது. எனவே கண்மாயை தூர்வார அரசு உத்தரவிடவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி பவுன்ராஜ் கூறுகையில், ‘குடிமராமத்து பணி முழுமையாக நடைபெறவில்லை. குளம் தூர்வாரப்படவில்லை. குளம் தூர்வாரினாலே அதிக தண்ணீர் சேமிக்க முடியும். நான்கு புறமும் கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும். ஆனால் வடக்கு பக்கமும், மேற்கு பக்கமும் மட்டுமே பலப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் விவசாயிகள் கண்மாயை தூர்வாரிய போது பலப்படுத்தப்பட்டது. தெற்கு பகுதியில் மால் அளந்து கல் போட்டதோடு சரி. இப்போது அந்த கல்களையும் காணவில்லை. அருகிலுள்ள சிலர் தெற்கு கரையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் கண்மாயில் தண்ணீர் இல்லாத பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை தூர்வாரும் பணிகள் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Tags : Kesavapuram ,
× RELATED செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி