×

100 % வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு பழங்கள் வைத்து அழைப்பிதழ்: கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்

கரூர், மார்ச். 31: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவருக்கும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்கள் வாக்குகளை 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலயுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு மேளதாளத்துடன் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து அழைப்பிதல் கொடுத்து ஜனநாயக திருவிழாவில் கலந்து கொண்டு வாக்களிக்க அழைப்பு விடுக்கும் வகையில் கரூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்ரமணியன், கரூர் நகர ஜவஹர் பஜார் பகுதியில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கினார்.

ஜவஹர் பஜார் கடைவீதியில் உள்ள உணவகங்கள், நகைக்கடைகள், சாலையோர வியாபாரிகள், பிற கடைகள் என அனைத்து கடைகளுக்கும் சென்று அங்குள்ள வாடிக்கையாளர்கள், கடைவீதியில் உள்ள பொதுமக்கள் என அனைவருக்கும் வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழ் கொடுத்து ஏப்ரல் 6ம்தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளதாவது: 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்காகவும், ஏற்கனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்கள் என அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்லூரிகளிலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் வளாக து£துவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளிடம், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போல், 200க்கும் மேற்பட்ட மகளிர்களைக் கொண்டு இரண்டு சக்கர வாகன பிரசாரம் போன்றவையும் நடத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட அனைவருரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதுதான். எனவே, வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 6ம்தேதி அன்று நடைபெறவுள்ள தேர்தலில் அவசியம் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த தேர்தல்களில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றான தாந்தோணி கணபதி நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாக மேளதாளத்துடன் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில், மகளிர் திட்ட இணை இயககுநர் வாணிஈஸ்வரி, தாசில்தார் சக்திவேல் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...