×

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 400 மரக்கன்றுகள் நடவு

ஊட்டி, மார்ச் 30: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ‘மக்களாட்சியை விதைப்போம் 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற மைய கருத்தினை கொண்டு குருத்துக்குளி கின்னஸ் பூங்காவில் 400 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி நடந்தது. இதை முதன்மை செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இண்ட்கோசர்வ் தலைமைச் செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து சுப்ரியா சாஹூ பேசியதாவது:நீலகிரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு குருத்துக்குளி கின்னஸ் பூங்காவில் அதிகமாக மரக்கன்றுகளை நடவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளோம். தற்போது, இதே பகுதியில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சார்பில்
‘மக்களாட்சியை விதைப்போம் 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற மைய கருத்தினை கொண்டு 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.

வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. தேர்தல் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை காண்பித்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். இதனை ஒரு போதும் விட்டுவிட கூடாது. தேர்தல் நாளன்று தங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். இதனை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்பகுதியில் குறைந்த அளவில் தான் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்களாகிய நீங்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் தங்களது வாக்குகளை பதிவு செய்ய முன்வர வேண்டும். மேலும், தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஸ்வீப் நோடல் அலுவலர் பாபு, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி செயற்பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர்கள் பாலசந்தர், பிரகாஷ், ஊட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுலவலர்கள் ஜனார்த்தனன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ