×

மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 30: மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று மின்னப்பாளையம், கள்ளுக்கடை நால் ரோடு, பாப்பா வலசு, வடக்குப்பாளையம், குட்டப்பாளையம், பழமங்களம், கோவில்பாளையம், கணக்கம்பாளையம், குலவிளக்கு, எல்லப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது: அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மொடக்குறிச்சியில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கிய தொழிலாக உள்ள விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 
விவசாய கல்லூரி ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மொடக்குறிச்சி தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். தெருவிளக்கு, கழிவு நீர் சாக்கடைகள், தார் சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். மேலும் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பயன்பெற அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். குரங்கன் ஓடையில் தடுப்பணைகள் கட்டமுடியும் என கண்டறிந்து நீர் தேக்கம் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டம் உயர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டும் அல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கு மக்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து காணியம்பாளையம், காகம், மேற்கு பாளையம், வாங்கலாம் பிரிவு, ஓலப்பாளையம், புளியங்காடு, விளக்கேத்தி, அத்தப்பம்பாளையம், எல்லைக்காட்டு புதூர், கொக்கிரிகாட்டு புதூர், குமாரவலசு, கொளத்துப்பாளையம், மூலக்கடை, காந்திபுரம், எல்லக்கடை மற்றும் சுற்றுப்புற
பகுதிகளில் வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Tags : Modakkurichi ,
× RELATED 300 ஆண்டு பழமையான மயானத்தை இடிக்க...