திருவண்ணாமலை, மார்ச் 30: திருவண்ணாமலை மாவட்டத்தில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. அதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை தயார்படுத்தி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் தற்போது தயார்படுத்தப்பட்டு, தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கான பொருட்கள் அனைத்தும் வரும் 5ம் தேதி அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 8 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,885 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், சின்னங்கள் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நேற்று நடந்தது. அந்தந்த தொகுதிகளின் ேதர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் இந்த பணி நடந்தது. மேலும், சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை வேட்பாளர்களுக்கு உறுதிபடுத்த செயல்விளக்கம் செய்துகாட்டினர்.
அதேபோல், வாக்களித்ததை உறுதிபடுத்தும் ஒப்புகை ரசீது (விவிபேட்) இயந்திரங்களில், பேப்பர் ரோல் பொருத்தும் பணியும் நடந்தது. அதில், அதன் செயலாக்கம் குறித்தும் செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. வாக்களிக்கும் சின்னத்துக்கு ஒப்புகை ரசீது வெளியாகிறதா என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். அதேபோல், இந்த தேர்தலில் முதன்முறையாக கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பின்பற்றப்படுகிறது. அதையொட்டி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான கிருமி நாசினி, கையுறை, உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தனித்தனி பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். ஒவ்வொரு இயந்திரத்தின் செயல்பாடுகளையும் முழுமையாக சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
