மன்னார்குடி நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும் அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் உறுதி

மன்னார்குடி, மார்ச் 30: மன்னார்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா ராஜமாணிக்கம் கோணப்பெருமாள் கோயில் பகுதியில் இருந்து நகர அதிமுக செயலாளர் ஆர்ஜி குமார் தலைமையில் தனது 10ம் நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மன்னார்குடி நகரத்திற்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் வீடு வீடாக சென்று மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது வாக்காளர் மத்தியில் வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் பேசுகையில், தமிழக மக்களின் நல் வாழ்விற்காக அதிமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. மன்னார்குடியில் கால்நடை மருத்துவமனைக் கட்டிடமும், உள்ளிக் கோட்டையில் கால்நடை மருந்தக கட்டிடமும் ரூ.75 லட்சத்தில் கட்டித் தரப் பட்டுள்ளது. ரூ. 2 கோடியில் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகமும், ரூ.3 கோடியில் தாசில்தார் அலுவலகமும், ரூ.2 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மன்னார்குடி நகரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டித் தரப்படும். படித்த வேலையில்லா இளைஞர்களின் நலன் காக்க தொழில்பேட்டை அமைக்கப்படும் என்றார். பிரசாரத்தின்போது, தேர்தல் பணிக்குமு தலைவர் பொன்.வாசுகிராம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் நெடுவை கலைவாணன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா அன்புச் செல்வம், பாஜக மாநில நிர்வாகி வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தமாக நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>