×

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்ட விழா

ஓசூர், மார்ச் 29:  ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மலை மீது பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்ட விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் தேர்பேட்டை கிராம மக்கள், பக்தர்கள் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வாழைப்பழம், உப்பு, மிளகு போன்றவற்றை தேரின் மீது தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Hosur Chandrasoodeswarar Temple Therotta Festival ,
× RELATED கடும் வெயிலால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்