×

நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையிடம் ரூ.1.77 கோடி சிக்கியது

ஊட்டி, மார்ச் 26: நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 77 லட்சத்து 95 ஆயிரத்து 568 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற ேதர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு பணம் விநிேயாகம் செய்வதை தடுக்கவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படை என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கிய நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ரூ.13 லட்சத்து 70 ஆயிரத்து 460 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து இதுவரை கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மட்டும் ரூ.95 லட்சத்து 53 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.40 லட்சத்து 2,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.42 லட்சத்து 38 ஆயிரத்து 848 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Nilgiris Flying Squadron ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையிடம் ரூ.1.04 கோடி சிக்கியது