மன்னார்குடி அருகே ஆந்திர சிறுமி மீட்பு

மன்னார்குடி, மார்ச் 25: மன்னார்குடி அருகே வழி தவறி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமி மீட்கப்பட்டு டிஎஸ்பி இளஞ்செழியன் முயற்சியால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் கடந்த 20ம் தேதி மாலை சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆதரவின்றி தனியாக சாலையில் நடந்து சென்றார். அவரை அப்பகுதி மக்கள் வழிமறித்து விசாரித்தனர். அவருக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கு மொழியில் பேசினார். மேலும், அழுக்கு ஆடைகளுடன் அந்த சிறுமி களைப்புடன் காணப்பட்டதால் பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று புத்தாடைகளை கொடுத்து உணவு வழங்கி தனது வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்தார். தனது பெயரை தவிர வேறு விபரங்களை அந்த சிறுமி கூறவில்லை. பின்னர், இது குறித்து மன்னார்குடியில் செயல்படும் நேசக்கரம் சேவை அமைப்பை தொடர்பு கொண்டு பெற்றோரிடம் சிறுமியை சேர்த்து வைக்க உதவி கேட்டு நேற்று ஒப்படைத்தார். தொடர்ந்து மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவர்களது பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைக்க வேண்டுமென கூறி சேவை அமைப்பினர் மனு அளித்தனர்.

அதனடிப்படையில், மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பகவதிசரணம், ஏட்டு மலர்கொடி ஆகியோர் சிறுமியை விசாரித்தனர். விசாரணையில், அந்த சிறுமியின் தந்தை வெங்கண்ணா, தாயார் அன்னபூர்ணா என்பதும், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், போளூரை அடுத்த பெட்டலா பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து டிஎஸ்பி இளஞ்செழியன், ஆந்திர மாநிலம் போளூர் பகுதி எஸ்ஐயை தொடர்புகொண்டு சிறுமியிடம் பேச வைத்தார். விரைவில் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நேரில் வந்து சிறுமியை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக போளூர் போலீசார் உறுதியளித்தனர். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமி மன்னார்குடியில் உள்ள அரசு காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.

Related Stories:

>