கிராம மக்கள் பாராட்டு சர்வதேச தடகள போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்

ஆண்டிபட்டி, மார்ச் 25: ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் கிஷோர்(17). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தடகள போட்டியில் ஆர்வம் கொண்ட கிஷோர் தன்னுடைய 13 வயதில் இருந்து பழநியில் உள்ள தனியார் கிளப் மூலம் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கிஷோர் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில் மும்முறை தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை வென்று தங்க பதக்கத்தை பெற்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் முதல் இடத்தில் வெற்றி பெற்று தங்கத்தை பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற கிஷோர் தனது சொந்த கிராமத்திற்கு வரும்போது மக்கள் வரவேற்பு அளித்து, பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் இளைஞரின் உறவினர்கள், ஊர் முக்கியஸ்தவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து கிஷோர் தெரிவிக்கையில், இதேபோல் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதற்கான வசதிகள் இல்லை. அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

Related Stories:

>