×

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் டீ போட்டு வாக்கு சேகரிப்பு

பெருந்துறை, மார்ச்  24:    பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.கே என்கின்ற ஜெயக்குமார் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுதுரை, கே.எஸ்.பழனிச்சாமி, பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் தனது பிரசாரத்தை தொடங்கினார். பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாபாளையம், கணக்கம்பாளையம், குள்ளம்பாளையம், பொன்முடி, சரளை, கம்புளியம்பட்டி கிராமப்புற பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, 6 சிலிண்டர் இலவசம், வாஷிங் மெசின் இலவசம் போன்ற திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் சென்ற இடமெல்லாம் சாலையின் இரு புறங்களிலும் பெண்கள், இளைஞர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
    மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த, பெண்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜெயக்குமார் அவர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதி நீர் மேலாண்மையை மேம்படுத்த கொண்டுவந்த குடிமராத்து திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் போது, உங்கள் நிலங்களில் கரும்பு, மஞ்சள், நெல், வாழை விளையும் பூமியாக மாறும் என கூறினார். இதனைத் தொடர்ந்து கம்புளியம்பட்டி, காசிபிள்ளாம்பாளையம் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஜெயக்குமார் அங்கு இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று அவர் தனது சிறுவயதில் தந்தையின் டீக்கடையில் டீ போட்ட அனுபவத்தை கொண்டு அங்கு இருந்த அனைவருக்கும் சிறந்த முறையில் டீ போட்டு கொடுத்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.   அப்போது, ஜெயக்குமார்  பேசுகையில், ‘தமிழக மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழில் துறையினர் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழ்ந்திட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் எனவும், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா இலவசம், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச சைக்கிள், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி போன்ற திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வழங்கிட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : AIADMK ,Jayakumar Dee ,Perundurai constituency ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...