×

மன்னார்குடியில் அனைத்து கட்சி பிரதிகளுடன் ஆலோசனை கூட்டம் தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது வழக்குபதிந்து சட்ட நடவடிக்கை

மன்னார்குடி, மார்ச் 24: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஸியாப், செலவினங்களுக்கான தேர்தல் பார்வையாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையிலும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி முன்னிலையிலும் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் சிறப்பு அதிகாரிகள் சந்திரமோகன் பிரசாத் காஸியாப் (பொது பார்வையாளர்), அருண்குமார் (செல வினங்கள்) ஆகியோர் கலந்துகொண்டு கோப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடைமுறைகளை விளக்கி கூறினர்.

இக்கூட்டத்தில், பொது தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஸியாப் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்சி கொடிகள், போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும். உரிய அனுமதியின்றி பிரசார வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சுப்பொறி மற்றும் வெளியீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் எந்த துண்டுப்பிரசுரம், போஸ்ட்டர் அச்சிடப்படவோ, வெளியிடவோ கூடாது. கிராமப்புறங்களில் சுவர் ஓவியங்கள் கட்டிடங்களின் உரிமையாளரின் தன்னார்வ முன் அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும். இது சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

அரசு சொத்துக்கள், பொது இடங்கள் மீதான சிதைவு தடைசெய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் நெகிழ்வு பலகைகள், பதாகைகள், போஸ்டர்கள், சுவர் எழுத்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். செலவினங்களுக்கான தேர்தல் பார்வையாளர் அருண்குமார் பேசுகையில், வேட்பாளர்கள் தினம்தோறும் செலவிடும் தொகை குறித்த விபரங்களை உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். 3 தினங்களுக்குள் செலவு குறித்த ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும். ரூ.10 ஆயிரத்திக்கு மேல் பண பரிவர்தனைகளை ரொக்கமாக கொடுக்காமல் காசோலைகள் மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில், தொடர்பு அலுவலர்கள் கார்த்திகேயன், இன்னாசிராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Mannarukadu ,
× RELATED மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல்...