×

தேர்தல் நடத்தை விதிகளின் பெயரால் மூடப்பட்டு கிடக்கும் காந்தியடிகள் சிலை காந்திய ஆர்வலர்கள் வேதனை

புதுக்கோட்டை, மார்ச் 23: தேர்தல் நடத்தை விதிகளின் பெயரால் தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகளின் சிலைகள் வெள்ளை காடாத் துணி கொண்டு சுற்றி மூடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதையடுத்து வீதிகள்தோறும் இருந்த கட்சிக் கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகள் அகற்றப்பட்டன.
கொடிமரங்களும், கல்வெட்டுகளும் துணிபோட்டு மூடப்பட்டுள்ளன, காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன.

குறிப்பாக பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் எல்லாப் பகுதிகளிலும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டின் விடுதலைக்காக போராடிய, நாடு முழுவதும் வீதி வீதியாகச் சென்று மக்கள் எல்லோரையும் ஒரே குடையின்கீழ் திரட்டிய தேசப்பிதா காந்தியடிகளின் சிலையும் விடுபடவில்லை. வழக்கம்போல, வெள்ளை காடா துணி போட்டு சுற்றப்பட்டு (மருத்துவமனைகளில் சடலங்களுக்கு உடற்கூராய்வு முடிந்த பிறகு சுற்றுக் கொடுப்பதைப் போல) விட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நிலையம் அருகே மிகப் பழமையான சிறிய அளவிலான காந்தியடிகள் சிலையும் தப்பவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே காந்தி சிலை மூடப்பட்டது என்றாலும், ஓரிரு நாட்களுக்கு முன்பு யாரோ அந்தச் சிலைக்கு இரு மாலைகளைப் போட்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. எந்தக் கட்சி சார்பும் இல்லாத காந்தியடிகளின் சிலைக்கு நேரிட்ட இந்தத் துயரைத் துடைக்க தேர்தல் ஆணையம் தனது விதிகளில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் காந்திய ஆர்வலர்கள். இதுகுறித்து மகாத்மா காந்தி ஆர்வலர்கள் கூறியதாவது: அண்ணல் காந்தியடிகள் எந்தக் கட்சியும் சாராத தேசத் தலைவர். கடந்த காலத் தேர்தல்களில் அரசியல் தலைவர்களின் சிலைகளை மட்டும் மூட வேண்டும், நேரடியாக அரசியலில் ஈடுபடாத தலைவர்களின் சிலைகளை மூடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தத் தேர்தலில் ஏன் இப்படி நடந்துள்ளது எனத் தெரியவில்லை என்றனர்.

Tags : Gandhian ,Gandhians ,
× RELATED வரலாறு தெரியாமல் காந்தியை...