×

வரலாறு தெரியாமல் காந்தியை விமர்சிக்கிறார் ஆளுநர் ரவி: காந்திய இயக்கம் கண்டனம்

நெல்லை: ‘சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாமல் காந்தியை பற்றி கவர்னர் விமர்சிக்கிறார்’ என்று காந்திய இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன், சமூக நல ஆர்வலர்கள் செங்கோட்டை ஐஏஎஸ் அதிகாரி என்எம் பெருமாள், திருமாறன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் விஜயலட்சுமி, பல் மருத்துவர் ஏகலைவன், நன்னன், பீமராஜா ஆகியோர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: இந்தியா சுதந்திரம் அடைந்ததில் காந்தியின் பங்கு இல்லை என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்றும் தவறான ஒரு செய்தியை, வரலாறு தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசும் போது கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தியாகிகள் வரிசையில் நாட்டிற்காக போராடிய வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பங்கு பெற்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சுதந்திரம் பெற வன்முறை என்ற வழியை நேதாஜி கையில் எடுத்தார். அந்த வன்முறை போராட்டத்தில் நாடு சுதந்திரம் பெற்றது என்று எவரும் இதுவரை கூறியது இல்லை. இந்த உண்மைகளை அறியாமல், கவர்னர் ஆர்என் ரவி, தேவையில்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து கருத்து தெரிவித்தது அபத்தமாகும்.

காந்தியின் அகிம்சை போராட்ட தீ நாடு முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. உலகமே அதிசயமாக நமது மக்களையும், காந்தியையும் திரும்பி பார்த்தார்கள். இதையெல்லாம் கவர்னர் அறிவாரா? ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்கு பிரிட்டிஷ் ஆட்சி வரிவிதித்து ஏழைகளின் வயிற்றில் அடித்தது. இதை எதிர்த்து காந்தி உப்பு சத்தியாகிரகம் அறிவித்தபோது, கேவலம் ஒரு பிடி உப்பு அள்ளுவதால் என்ன நடந்துவிட போகிறது என பிரிட்டிஷ் அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொண்டது. ஆனால் காந்தி நடத்திய உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் விளைவாக அவரை லண்டனுக்கு அழைத்து பேசுவதற்கு பிரிட்டிஷார் ஏற்பாடு செய்ததை கவர்னர் அறிவாரா?. காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டம் 1942 முதல் 1946 வரை நீடித்தது. இதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு 1947ம் ஆண்டு ஆக.15ம் தேதி சுதந்திரம் அளித்தது. எண்ணற்ற தியாகிகள் காந்தியின் தலைமையில் அரும்பாடுபட்டு, சுதந்திரம் பெற்ற வரலாறு தெரியாமல் கவர்னர் மாணவர்கள் மத்தியில் பேசியது அபத்தம். இதுபோன்று பெரும் பதவியில் இருப்பவர்கள் வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும். கவர்னர் தன் உரையை வாபஸ் வாங்கி வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.

The post வரலாறு தெரியாமல் காந்தியை விமர்சிக்கிறார் ஆளுநர் ரவி: காந்திய இயக்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Gandhi ,Gandhian ,Nellai ,India ,Vivekanandan ,Red Fort ,IAS ,NM Perumal ,Thirumaran ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து